சென்னை: டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு மறியலில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்திய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களையும், இண்டியா கூட்டணி தலைவர்களையும் டெல்லி காவல் துறை நேற்று கைது செய்தது. இதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் செல்வப்பெருந்தகை உட்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார், நேற்று மாலை விடுவித்தனர்.
இந்த மறியல் போராட்டம் குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அதனால் மக்களவை வளாகத்திலிருந்து, தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, மத்திய பாஜக அரசும், டெல்லி போலீஸாரும் கைது செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். தேர்தல் ஆணையத்தில் நடந்துள்ள முறைகேடு, சதித்திட்டம், தேர்தல் ஆணையமும் பாஜகவும் எப்படி மோசடி செய்துள்ளன என்பதை புள்ளி விவரங்களுடன் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்க திறன் இல்லாமல் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தியக் குடிமக்கள் அவர்களின் வாக்கை யாருக்கு செலுத்துவது என்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் இதைத்தான் சொல்கிறது. ஆனால் ஒருவருடைய வாக்கைத் திருடுவது எந்த வகையில் நியாயம். இதற்கு பதில் சொல்ல முடியாமல் எல்லா மாநிலங்களிலும் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதிலிருந்து அவர்கள் தப்புவது கடினம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், பி.வி.தமிழ்ச்செல்வன், துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் ஜெ.டில்லிபாபு, முத்தழகன், இலக்கிய அணித் தலைவர் புத்தன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர்.