கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கில் கைது செய்து போருக்கு அனுப்ப அந்த நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவனை மீட்க வேண்டும் என்று பெற்றோர் மத்திய, மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளை யங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றார்.
அப்போது எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அறை எடுத்து தங்கினர். கிஷோர் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், படிப்பு செலவுக்காக கிஷோர், நித்திஷ் இருவரும் ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய் யும்போது அதில் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்நாட்டு காவல்துறையினர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தகவல் கிஷோரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஜாமீனில் எடுத்து, இந்தியா அழைத்து வரவும் ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டு காவல்துறையினர் அவர்களை உள்நாட்டில் நடைபெறும் உக்ரைன் போருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு, வலுக்கட்டாயமாக தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்து, அவர்களிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது; என்னை போருக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பில்லை; எப்படியாவது என்னை மீட்டுவிடுங்கள் என்று கிஷோர் ஆடியோ ஒன்றை வெளியிட் டுள்ளதாகவும், எனது மகனை ரஷ்யா சிறையிலேயே வைத்து விடுங்கள்.
போருக்கு அனுப்ப வேண்டாம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோ ருக்கு கிஷோரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.