சென்னை: ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட விருக்கும் தமிழக மாணவரை மீட்க தொடர் முயற்சி எடுத்து வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் அவர், கடந்த 2023-ம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஆயுதபயிற்சி, போதை மருந்து போன்றவற்றை கொடுத்து போருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் மனரீதியாக பெரும் துயரில் இருப்பதாக கிஷோர் கூறியுள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் போருக்கு அனுப்பப்படலாம். அப்படி அனுப்பினால் நாம் அவரை இழக்க நேரிடும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முதலில் ஒலித்தது மதிமுகவின் குரல் தான். தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், செயலரை ஆகியோரிடம் பேசினேன். இந்திய ரஷ்ய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, போருக்கு கிஷோரை அனுப்பக் கூடாது என வலியுறுத்தியிருப்பதாகவும், 126 பேரில் பலரை மீட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறைச் செயலர் தெரிவித்தார்.
இதுகுறித்த கடிதத்தில் 68 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களும், தங்களது மாநிலத்திலும் சிலர் ரஷியாவில் சிக்கியிருப்பதாக தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி 126 இந்தியர்களை ரஷ்ய அரசு போருக்கு தயார்படுத்தியுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேரை காணவில்லை.
இவ்வாறு அங்கு செல்வோரை அந்நாட்டு குடிமகன் என்பதற்கான ஆவணங்களையும் ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இதுபோன்ற செயல்களை தீவிரவாத அமைப்புகள் செய்யக் கூடும். ஆனால், இத்தகைய கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற செயலை ரஷ்யா என்ற நாடு செய்கிறது.
இதுகுறித்து மத்திய அரசும் வலியுறுத்தியுள்ளது. அதன் பின்னரும் அவர்கள் அதையே செய்கின்றனர். அங்கு செல்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள சிக்கல்கள் குறித்து தெரிவிக்கும் குடியேறுவோருக்கான சோதனை நடை முறையை (இசிஆர்) ரஷ்யாவுக்கும் அமல்படுத்த வேண்டும்.
வரும் வாரத்தில் பிரதமரையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளேன். அங்கு சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சந்திப்பின்போது கிஷோரின் பெற்றோர் உடனிருந்தனர்.