கடலூர்: ரஷ்யாவில் கைதாகி சிறையில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவ மாணவரை மீட்கக்கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து, ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்று, அங்கு தவறான குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் தனது மகன் கிஷோரை விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு, உரிய முறையில் மனு அளித்து தீர்வு காணுமாறு கூறினர். இதையடுத்து சரவணன் மற்றும் சிலர், மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறியது: நான் டிரைவராக பணியாற் றுகிறேன். எனக்கு பாமா என்ற மனைவியும், கிஷோர் (22) என்ற மகனும் உள்ளனர். கிஷோர் ரஷ்யாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக சென்றார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தீஷ் மற்றும் 3 ரஷ்ய மாணவர்களுடன் கிஷோர் ஒரே அறையில் தங்கியிருந்தான்.
ரஷ்ய மாணவர்கள், கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்தனர். வாடிக்கையாளருக்கு பொருட்களை விநியோகம் செய்தபோது பார்சலில் போதைப் பொருள் இருந்ததாகக் கூறி 3 ரஷ்ய மாணவர்களையும், அவர்களுடன் தங்கியிருந்த எனது மகன் கிஷோர் மற்றும் நித்தீஷையும் கைது செய்தனர்.
இதில் ரஷ்ய மாணவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், எனது மகனை விடுவிக்கவில்லை. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், கிஷோரை விடுவிக்க முடியவில்லை. கிஷோர், நித்தீஷ் ஆகிய இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
எங்கள் மகன், தான் பேசிய ஆடியோ ஒன்றை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளான். அதில், எங்கள் மகனை உக்ரைன் நாட்டுக்கு எதிரான போருக்கு செல்ல போலீஸார் மிரட்டி வருகின்றனர். இதற்காக ரஷ்யாவில் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் ஆவணம் ஒன்றிலும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர். அவனுக்கு ரஷ்யா அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் பயிற்சி முடித்ததும், போர்க்களத்துக்கு அனுப்பி விடுவார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், எங்கள் மகனைக் காப்பாற்றி, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும், “எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.ரஷ்யாவில் கைதாகி வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கும் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோரை மீட்கக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள்.