சென்னை: தமிழகம், கேரளாவில் ரயில்வே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 12 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.727 கோடியை தெற்கு ரயில்வே திரும்ப ஒப்படைத்ததாக அண்மையில் தகவல் வெளியாகின. இதற்கு தெற்கு ரயில்வே ஏற்கெனவே விளக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம், கேரளாவில் ரயில்வே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு காலாண்டுக்குள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அடுத்தடுத்த காலாண்டுகளில் பயன்படுத்த முயற்சி செய்யப்படும் என்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பிய வழக்கமான அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றம், சில ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் தெற்கு ரயில்வேயின் திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் பல்வேறு ரயில்வே பணிகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து தெரிவித்துள்ளது. மேலும், 2025-26 நிதியாண்டிற்கான அமைச்சகத்தால் அந்தந்த திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அசல் பட்ஜெட் ஒதுக்கீடு, நிதியின்படி தெற்கு ரயில்வே தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பல்வேறு திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.