சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னை தியாகராய நகர் வடக்கு கிரசன்ட் சாலையில் உள்ள ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட் ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று காலை 10 மணி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல, வடபழனி, ஆழ்வார்பேட்டை, எம்ஆர்சி நகரில் உள்ள இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்கள் என சென்னை மற்றும் புறநகரில் 20 இடங்களில் நேற்று சுமார் 100 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
கடல் நீரில் இருந்து பல்வேறு மூலப்பொருட்களை பிரித்தெடுத்து ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, இந்த நிறுவனம் கடந்த காலங்களில் தாக்கல் செய்த வருமான வரி படிவங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், வரி ஏய்ப்பு நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, வெளிநாடுகளில் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி செய்தது தொடர்பான ஆவணங்கள், முதலீடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓரிரு நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. சோதனை முடிந்த பிறகே முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.