குன்னூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி நாளை நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் கண்டோன்மென்ட் வாரியம் சார்பில், யோகா தினம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 கிலோமீட்டர் நெடுந்தூரம் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தத் தொடர் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில், அக்னி வீரர்கள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள், கண்டோன்மென்ட் வாரிய ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நெடுந்தூர ஓட்டம் தங்கராஜ் ஸ்டேடியத்தில் நிறைவு பெற்றது. அங்கு கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பாபா சாகிப் லோட் டே, மற்றும ராணுவ அதிகாரிகள் உட்பட ராணுவ வீரர்களின் யோகா பயிற்சி நடைபெற்றது.