யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சையில் நோயாளிக்கு கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு படிப்படியாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு யோகா இயற்கை மருத்துவ பேராசிரியர் மருத்துவர் ஒய்.தீபா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டனர். இந்திய மருத்துவ முறை ஆய்வாளர்கள் ஏ.விஜய், கே.பத்மாவதி, ஆர்.நித்யஸ்ரீ, மூவேந்தன் ஆகியோர் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கணைய அழற்சி என்பது உடலில் உள்ள கணையத்தில் சேதம் அல்லது வீக்கம் ஏற்படும் நிலையாகும். அந்த பாதிப்பு தொடர்ந்து இருந்தால் கணையத்தால் மேற்கொள்ளப்படும் அகச்சுரப்பி மற்றும் புறச்சுரப்பி பணிகளில் சிக்கல் ஏற்படும். அதேபோல், அழற்சி உள்ளவர்களுக்கு கணையத்தின் வெளிப்பகுதியில் சூடோசிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டி உருவாகும்.
உலக அளவில் லட்சத்தில் 163 பேர் வரை கணைய அழற்சி பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதில் நாள்பட்ட கணைய அழற்சிக்கு உள்ளாகும் 40 சதவீதம் பேருக்கும், குறுகியகால அழற்சிக்கு உள்ளாகும் 26 சதவீதம் பேருக்கும் சூடோசிஸ்ட் கட்டிகள் உருவாகின்றன.
அத்தகைய பாதிப்புடன் 23 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு இயற்கை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர வயிற்றுவலி, மலம் கழித்தலில் பாதிப்பு, கால்களில் எரிச்சல், எடை இழப்பு ஆகிய பாதிப்புகள் இருந்தன. பரிசோதனையில் அவருக்கு தீவிர கணைய அழற்சி மற்றும் பெரிய அளவிலான கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, பவனமுக்தாசனா, வக்ராசனா உள்ளிட்ட 7 வகையான ஆசனங்கள், பிராணயாம பயிற்சிகள், அதனுடன் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 20 நாள் சிகிச்சை அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், அந்த பெண்ணின் கணைய கட்டி பாதிப்பும், அழற்சியும் குறைந்தது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இது ஒரு நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஆகும். இதனை மேலும் நுட்பமாக அறிய கூடுதல் ஆய்வு தேவைப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.