சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன – மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி செந்தில்குமார், “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான காணொளிகள் வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
கரூரில் நடந்துள்ள சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது. பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கட்சித் தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது.” என்று கூறி வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
இந்நிலையில், இது பற்றி வீடியோ வெளியிடுவதாக மாரிதாஸ் கூறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரை சென்னை போலீஸார் கைது செய்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.