சென்னை: நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்டுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்று, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், இன்று (21-ம் தேதி) நடைபெறும் இல.கணேசனின் புகழஞ்சலி நிகழ்வுக்கு குடும்பத்தினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இல.கணேசன் மறைவு என்பது பெரும் இழப்பு. நான் கட்சி நிகழ்ச்சி காரணமாக வேறொரு ஊரில் இருந்ததால், என்னால், இல.கணேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.
கட்சி பாகுபாடின்றி திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகமும் மாநாடு நடத்தட்டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான்.
திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுக ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் தர், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன் உடன் இருந்தனர்.