ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறிய கிராமம் குள்ளம்பாளையம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்த 25 வயது இளைஞரை, எம்ஜிஆர் என்ற காந்தம் ஈர்த்துக் கொண்டது. அதன் விளைவாக, அதிமுகவில் 1972-ல் தொடக்கிய அந்த இளைஞரின் அரசியல் பயணம், இப்போது வரை தடம் மாறாமல் தொடர்ந்து வருகிறது. அதிமுக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாய் மாறி நிற்கும் அந்த இளைஞர்தான் கே.ஏ.செங்கோட்டையன்.
கேஏஎஸ் என்று அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் செங்கோட்டையனின் 50 ஆண்டுகளைக் கடந்த அரசிய பயணம், தமிழக அரசியல் வரலாற்றின் பல பக்கங்களை நிறைத்து நிற்கிறது.
எம்ஜிஆரின் போர்ப்படையில் தளபதியாய், அதிமுகவில் நுழைந்த கேஏஎஸ்ஸுக்கு, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பதவிதான் முதலில் கிடைத்த பதவி. அப்போது, ஆளுங்கட்சியாக திமுக இருந்த நிலையில், அடக்குமுறைகளைத் தாண்டி, கோவையில் அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டிய பொறுப்பு முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், திருப்பூர் மணிமாறனோடு சேர்ந்து செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
எம்ஜிஆர் தன் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கேஏஎஸ், அவரது உத்தரவால் கைகளில் பச்சை குத்திக் கொண்ட தளகர்த்தர். எம்ஜிஆரை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை; நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு என்ற வாசகம் பிரபலமானது. அந்த வகையில் எம்ஜிஆரின் ஆசிர்வாதம் பெற்ற செங்கோட்டையனுக்கு, 1977-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது.
காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய சத்தியமங்கலத்தில் அதிமுகவின் சாதாரண தொண்டனான செங்கோட்டையன், வெற்றி வாகை சூடினார். இதன் தொடர்ச்சியாக 1980-ம் ஆண்டு அதிமுகவின் வேட்பாளராக கோபி தொகுதியில் களமிறங்கிய செங்கோட்டையன் பெற்ற வெற்றி, இன்று வரை கோபி தொகுதியை அவரது சொத்தாக மாற்றி வைத்திருக்கிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையாளராக திகழ்கிறார் கேஏஎஸ்.
அதிமுகவின் அடுத்த வாரிசாக களம் கண்ட ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கேயம் அழைத்து வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. ‘சறுக்கலுக்கோ, வழுக்கலுக்கோ இடம் கொடுக்காமல், கொள்கை உறுதியும், தலைமையின் மீது விசுவாசமும் உள்ளவர் செங்கோட்டையன்’ என்று ஜெயலலிதாவின் பாராட்டை பலமுறை பெற்றவர் செங்கோட்டையன்.
ஜெயலலிதாவின் விரல் அசைவில் தொடர்ந்து இயங்கியதன் பலனாய், போக்குவரத்து துறையில் தொடங்கி பல்வேறு துறைகளின் அமைச்சராக, கட்சியின் தலைமை நிலையச் செயலர் வரை பல்வேறு கட்சி பதவிகளும் செங்கோட்டையனைச் சேர்ந்தது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் கட்சி இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று செயல்பட்டவர் செங்கோட்டையன். அவரது ஆதரவாளராக சேவல் சின்னத்திலும் வென்று காட்டியவர். 1991-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும் செங்கோட்டையனின் பங்களிப்பு கணிசமானது.
1996-ல் அதிமுக தோல்வியைத் தழுவியபோது, வழக்குகளுக்கு பயந்து கட்சியை விட்டு பலரும் ஓடிய போதும், ஜெயலலிதாவை விட்டு ஓடாதவர். ‘நானே நேரடியாக அழைத்தாலும், திமுகவுக்கு வரமாட்டார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி, செங்கோட்டையன் குறித்து கூறியதாக ஒரு தகவலும் உண்டு.
அதிமுக தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில், செங்கோட்டையன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்
அதேபோல் செங்கோட்டையன் முன் நின்று நடத்திய அதிமுக மாநாடுகள் இன்றும் பிரமிப்பில் ஆழ்த்துபவை. மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் பிரமாண்ட ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்து, அதனை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிடச் செய்த வரலாறும் உண்டு.
தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை. அதேபோல், தனக்கென ஆதரவாளர் வட்டத்தைச் சேர்க்கவும் விரும்பியதில்லை. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும், அதே விசுவாசத்தோடு இருந்தவர் கேஏஎஸ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் காத்திருந்தார் செங்கோட்டையன். தலைமை ஏற்கும் வாய்ப்பு தனக்கு வந்த நிலையில், பெருந்தன்மையுடன் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தவர் செங்கோட்டையன் என்று அப்போது நடந்த சம்பவத்துக்கு ஆதார குரலை டிடிவி தினகரன் இப்போதும் வெளிப்படுத்தி வருகிறார்.
கட்சியில் தன்னை விட இளையவர்கள் முக்கிய பதவிகளுக்கு வந்தபோதும், அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டவர். இபிஎஸ் தலைமையிலான நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பணிபுரிந்து, பல்வேறு சாதனைகளை புரிந்தவர்.
அந்தக் காலகட்டத்திலும் சரி, அதன்பின் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், பொதுக்குழு, சட்டப் போராட்டம் என கட்சியில் பூகம்பம் ஏற்பட்டபோதும், தான் சொல்லும் கருத்து கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று அமைதி காத்தவர், கட்சியின் மூத்தவரான செங்கோட்டையன்.
சமீபத்தில், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடபாக இபிஎஸ்-க்கு நடந்த பாராட்டு விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று கலகக்குரல் எழுப்பி பரபரப்பை கூட்டினார். இதன் தொடர்ச்சியாக கோபியில் நடந்த பொதுக் கூட்டத்தில், ‘தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் உடன் 14 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டவன் நான். தமிழகம் முழுவதும் கிராமம் வாரியாக உள்ள அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்’ என்று அதிமுகவின் ஆணி வேரான செங்கோட்டையன் ஞாபகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
‘தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்றக் கூடியவன். என்றைக்கும் தலைவராக நினைக்கவில்லை’ என்று தன் மனநிலையை வெளிப்படுத்தியுள்ள செங்கோட்டையன், ‘இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள்’ என்று ஆதங்கத்தை, ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக வட்டாரத்தை மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்தையே அதிரச் செய்துள்ளது செங்கோட்டையனின் உரிமைக் குரல். அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கு, அதிரடி காட்டுவாரா? ‘நான் அமைதியான சுபாவம்’ கொண்டவன் என்று மீண்டும் கட்சி நலன் என்ற போர்வையில் அமைதியாவாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.