பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.
அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.
பல்வேறு நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும், துணிநூல் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
வெல்வது உறுதி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இண்டியா கூட்டணியின் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதன்படி அந்த கூட்டணியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன்படி, 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்த கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
திருப்பூர் மூத்த அரசியல்வாதிகள் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்தே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவியை பாஜக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தை வென்றெடுக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்திருந்ததால், இந்த அறிவிப்பும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டல பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பின் மூலம் கொங்கு மண்டலம், மேலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது” என்றனர்.