சென்னை: வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன் நேற்று காலமானார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை வீட்டில் அவர் கால் தவறி கீழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த, அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது உடல்நிலை யில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாறாக, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்ற நிலையில், மாலை 6.23 மணிக்கு இல.கணேசன் காலமானார். கடந்த ஜன.8-ம் தேதி இல. கணேசனின் சகோதரர் இல. கோபாலன் வயது மூப்பு, உடல் நலக்குறைவால் காலமானார்.
இல.கணேசன் கடந்து வந்த பாதை: தஞ்சாவூரில் 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இலக்கு மிராகவன் – அலமேலு தம்பதிக்கு 7-வது மகனாக பிறந்தவர் இல. கணேசன். சிறுவயதில் தந்தையை இழந்த இல.கணேசன், சகோதரர்களின் அரணைப்பில் வளர்ந்தார். அவர்கள், ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டில் இருந்ததால், தனது 5 வயதிலே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டார்.
ஆர்எஸ்எஸ் மீதான பற்று காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டே ஆர்எஸ்எஸ் பணிகளிலும் கவனம் செலுத்தினார். 1970-ம் ஆண்டு அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர செயல்பாட்டாளராக பொது வாழ்வில் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாகர்கோவில் பொறுப்பாளராக இருந்த இல. கணேசன், பின்னர், நெல்லை, மதுரை மாவட்ட பொறுப்பாளராக வும், அதனை தொடர்ந்து மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இதையடுத்து மாநில இணை அமைப்பாளர் என ஆர்எஸ்எஸ்-ல் பயணித்த கணேசன், 1991-ல் பாஜகவில் இணைந்து, தேசிய செயற்குழு உறுப்பினரானார். இதையடுத்து, விரைவிலேயே அமைப்பு பொதுச் செயலாளரானார்.
பாஜகவுக்கு தமிழ் முகம் கொடுத்தவர் என்ற பெருமை இல.கணேசனுக்கு உண்டு. தமிழகத்தில் கடைகோடிக்கும் பாஜகவை கொண்டு சேர்த்தவர். எழுத்தார்வம் கொண்ட இல.கணேசன், பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்புவகித்தார்.
‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் நடத்தி வந்தார். பாஜகவில் இவர் ஆற்றிய பணி, இவரை பாஜக தேசிய செயலாளர், தேசிய துணை தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளில் அமர வைத்தது. குஜராத்தில் மோடியும், தமிழகத்தில் இல.கணேசனும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ல் அடுத்தடுத்த நிலை நோக்கி நகர்ந்தவர்கள்.
நெருக்கடிநிலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதோடு பாடல்களும் எழுதினார். அப்போதும் கூட தனிநபர் தாக்குதல், கண்ணியக்குறைவான பேச்சைத் தவிர்த்தார். கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அமைப்புக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நட்போடு பழகுபவர் கணேசன். திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.டி.கே.தங்கமணி, நல்லகண்ணு, சங்கரய்யா மீதும் அளவு கடந்த மரியாதை வைத்திருப்பவர்.
2009, 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனாலும், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இல.கணேசனை தேர்வு செய்து பாஜக அழகு பார்த்தது.
பாஜகவின் நீண்ட கால உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசன், 2021-ல் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்த நிலையில், 2023-ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது வரை ஆளுநர் பதவியில் இருந்து வந்தார்.
ஆளுநர், முதல்வர் அஞ்சலி: மருத்துவமனையில் இருந்து இல.கணேசனின் உடல் தி.நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.