அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடியார், “குன்னூர் நகராட்சியில் டெண்டர் விடும் பணிகளில் திமுக துணைத் தலைவர் ஊழல் செய்திருப்பதாகவும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்திருக்கின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடி கிளப்பினார்.
எடப்பாடியார் பற்றவைத்த இந்தப் பட்டாசு குன்னூர் திமுக-வினரை தகிக்க வைத்திருக்கிறது. முன்னாள் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக்கின் மகன் வாசிம் ராஜா தான் இப்போது குன்னூர் நகராட்சி துணைத் தலைவராக இருக்கிறார் என்பதால் இது மாவட்ட அரசியலிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
எடப்பாடியாரின் புகார் குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் அதிமுக-வினர், “குன்னூர் சுற்றுவட்டாரத்தில் சமீப காலமாக கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வேண்டி நீண்ட நாட்களாக பலரும் காத்திருக்கும் நிலையில், குன்னூரில் திமுக-வினர், விதிகளை மீறி கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கின்றனர். இதனால், உழவர் சந்தை, புரூக் லேண்ட், சிம்ஸ் பார்க், ஓட்டுப் பட்டறை, ஸ்டேன்லி உள்ளிட்ட இடங்களில் விதிகளுக்குப் புறம்பாக சுமார் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முளைத்து வருகின்றன.
மேலும், குன்னூர் நகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதுவும் துணைத் தலைவருக்கு நெருக்கமானவர்களின் வார்டுகளுக்கே அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதை திமுக கவுன்சிலர்களே வருத்தப்பட்டுச் சொல்கிறார்கள். நகராட்சியில் விடப்படும் அனைத்து டெண்டர்களிலும் துணை தலைவர் தலையிட்டு தனக்கானதை சாதித்துக் கொள்கிறார். இதைத்தான் எடப்பாடியார் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுப் பேசினார்” என்றனர்.
திமுக கவுன்சிலரான ராபர்ட் நம்மிடம், “குன்னூர் நகராட்சியில் பல இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் தரமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டதால் அண்மையில் பெய்த மழையில் சாலைகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் பாரபட்சம் காட்டப்படுவதால் அரசால் ஒதுக்கப்படும் நிதியானது முறையாக மக்களுக்குச் செல்லாமல் தடுக்கப்படுகிறது” என்றார்.

இதற்கெல்லாம் குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜாவிடம் விளக்கம் கேட்டபோது, “அதிமுக ஆட்சியில் குன்னூர் நகராட்சியில் உருப்படியாக எந்தப் பணியும் நடக்கவில்லை. திமுக ஆட்சியில் தான் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. குன்னூரில் உள்ள 30 வார்டுகளிலும் வேலைகள் நடக்கின்றன. உண்மை நிலவரம் இப்படி இருக்க, யாரோ எழுதிக் கொடுத்ததை அதில் உண்மை இருக்கிறதா என்றுகூட விசாரிக்காமல் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பழனிசாமி பாட்டுக்கு படிச்சுட்டுப் போயிட்டாரு” என்றார்.
இதனிடையே, “குன்னூரில் பேசுவதற்கு எத்தனையோ சப்ஜெக்ட் இருக்கையில் மிகச் சாதாரண மனிதரான வாசிம் ராஜாவை பற்றி பேசி அவரை ஸ்டேட் லீடர் ரேஞ்சுக்கு பெரியாளாக்கிட்டுப் போய்ட்டாரு இபிஎஸ்” என்று திமுக-வுக்குள்ளேயே சிலர் அங்கலாய்க்கிறார்கள்!