சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் தமிழகத்தின் பொருளாதாரம் சரியும். பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் அம்பானிக்கும், அதானிக்கும்தான் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு ரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்கு சென்றடையவில்லை.
அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.
வாக்கு திருட்டு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு செப்.7-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதம் நோக்கம் சரியானது. ஆனால் வாக்கு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடைமாற்றும் வகையில் உள்ளது. அவர் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஜி.கே.மூப்பனார் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக்கொண்டதில்லை. அவரது மகன் ஜி.கே.வாசன், அவரது அப்பாவின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா என தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.