மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன். இவரது மகன் எஸ்.பி.எஸ்.ராஜா. தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு மாமன்ற உறுப்பினரான ராஜா, அதிமுகவில் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரை, ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடு த்து ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட தாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ்.ராஜா (தூத்துக்குடி தெற்கு பகுதி கழகச் செயலாளர்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.