கிருஷ்ணகிரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம் என கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ மூன்றாம் கட்ட பிரச்சாரத்தின் 2-வது நாளான இன்று (ஆக.12) கிருஷ்ணகிரியில் ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும் என பேசியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கோவை, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
திமுக ஆளும் கட்சியாக இருக்கலாம். கோவையில் அதிமுகதான் ஆளும் கட்சி. 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 80 சதவீதம் வெற்றி பெற்று வலுவான கட்சி என நிரூபித்து உள்ளோம். மேற்கு மண்டலம் அதிமுக வலிமையாக உள்ளது. மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
தமிழகத்தில் ஸ்டாலின் பல திட்டங்களை அறிவித்ததாகவும், அந்த எரிச்சலில் நான் பேசுவதாக கூறியுள்ளார். அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது, அந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், நலம் காக்கும் ஸ்டாலின் என்கிற திட்டத்தை தொடங்கி உள்ளனர். இதேபோல், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பொதுமக்களின் 46 குறைகளை தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது எல்லாம் ஸ்டாலினின் சித்து விளையாட்டுகள்.
4 ஆண்டுகள் கும்பகர்ணன் ஆட்சி செய்துள்ளார். தங்கம், வெள்ளி நிலவரம் பார்ப்பது போல், கொலை நிலவரத்தை பொதுமக்கள் பார்க்கும் நிலை உள்ளது. சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை இல்லாத நாளே இல்லை. பட்டப் பகலில் கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரையிலும், காவல் துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல் துறையை கண்டு அச்சமில்லை.
திமுக ஆட்சியில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதேபோல், நகரம் முதல் கிராமங்கள் வரை போதை பொருட்கள் கிடைக்கிறது. இதுகுறித்து நாங்கள் தெரிவித்த போது, அப்போதைய டிஜிபி 2.0, 3.0 என பல ஓ-க்களை போட்டுவிட்டு, ஓய்வு பெற்றுவிட்டார். எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. திமுகவின் தாரக மந்திரம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் என கூறுகிறார்கள். மதுக்கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, கடந்த 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
தொழில் தறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் காரணம் எனக் கூறியுள்ளார். உதய் திட்டம், நாடு முழுவதும் உள்ள திட்டம். நாங்கள் 2 விதிகளை விலக்கி கொண்டதால், உதய் திட்டத்தில் கையெழுத்திட்டோம். 2017-ம் ஆண்டு முதல் 2021 வரையில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சியில் தான் 67 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடு விழா கண்டுள்ளது.
சொத்து, குடிநீர் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு கூட வரி போட்டுள்ளனர். வரி மேல் வரி போட்டு மக்களை கொடுமைப்படுத்தும் இந்த அரசு தேவையா. சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்க போவது உறுதி.
விவசாயிகள் பாதிக்கும்போது உதவி செய்த அரசு அதிமுக அரசு. கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடனை 2 முறை தள்ளுபடி செய்தோம். குடி மராமத்து திட்டத்தில் ஏரி, குளங்களை தூர்வாரினோம். வண்டமல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுததோம். அதை யெல்லாம் நிறுத்தி விட்டார்கள். குடி மராமரத்து திட்டம் அதிமுக ஆட்சி வந்ததும் தருவோம். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு பயனான திட்டங்கள் தந்தது அதிமுக அரசு. பயிர் காப்பீடு திட்டம் தந்தோம். வறடசி காலத்தில் சேதத்தை மதிப்பீட்டு நிதியை தநதோம்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன் பெற கிருஷ்ணகிரி – ஓசூர் பகுதியில் 348 கோடியில் மருத்துவக் கல்லூரி தந்தோம். வரும் வழியில் பார்த்தேன். நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் அளவுக்கு உள்ளது. இந்த அரசு முறையாக பராமரிக்கவில்லை. முறையாக பராமரிப்பு இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. ஏழை மக்களுக்கு முறையான சிகிச்சை இல்லை. 348 கோடி போட்டு தந்தும் இந்த அரசு மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கும் சூழல் இல்லை. மோசமாக உள்ளது.
இனியாவது அந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் தர வேண்டும். உயர் சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி வந்ததும் இந்த மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக திகழும். கரோனா காலத்தில் தொழிலாளர்கள் வேலையின்றி இருந்தனர். அந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் கொடுத்து ஏழைகளை பாதுகாத்த அரசு அதிமுக.
அதிமுக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் போட்டோம். இந்த அரசு மக்களுக்கான அரசு. வேப்பனப்பள்ளி ஒன்றியம் எண்ணேகொள் கால்வாய் திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிமுக அறுதி பெரும்பாமையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.