“சேலத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு மேயரை மாற்ற வேண்டும் எனக் கருதினால் மாற்றிவிடுங்கள்” – மாவட்ட அமைச்சர் ராஜேந்திரனை சாட்சியாக வைத்துக் கொண்டு சேலம் மாநகர திமுக அவைத் தலைவர் சுபாஷ் இப்படிப் பேசியது கட்சிக்குள் கலகத்தை உண்டாக்கி வருகிறது.
2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி தான் வென்றது. சேலம் வடக்கில் மட்டுமே திமுக வென்றது. அந்த ஆதங்கத்தில் சேலத்துக்கு அமைச்சரவையில் இடமளிக்காமல்க்காமல் ஒதுக்கியது திமுக தலைமை (அண்மையில் தான் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது), இந்த நிலையில், இம்முறை சேலம் மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த ஜூனில் சேலத்துக்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின், கட்சியைப் பலப்படுத்த திமுக-வினருக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், “கட்சிப் பணியில் கவனம் செலுத்தாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் மாற்றப்படுவார்கள்” என எச்சரிக்கை மணியும் அடித்துச் சென்றார்.
இந்த நிலையில், சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் அண்மையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் நடந்தது. அதில், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன் முன்னிலையில் பேசிய மாநகர அவைத்தலைவர் சுபாஷ், மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கவலை அமைச்சருக்கு இருக்கிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும். எனவே, செயல்படாதவர்களை களை எடுங்கள். மாநகராட்சியில் மக்களின் குறைகளை சரி செய்துவிட்டார்களா என்றால் அது நிச்சயமாக இல்லை. அதற்கு மேயரும் பொறுப்பேற்க வேண்டும். அவர் அமைச்சரின் பேச்சை கேட்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது.
அமைச்சரின் பேச்சை மேயர் கேட்டிருந்தால், சாதித்து இருக்க வேண்டும். என்னை மாற்ற வேண்டும் என அமைச்சர் விரும்பினால் தாராளமாக மாற்றலாம். அதேபோல் மேயரையும் மாற்ற வேண்டும் என கருதினால் மாற்றிவிடுங்கள்” என அதிரடியாகப் பேசிவிட்டு அமர்ந்தார். சுபாஷ் பேசிய இந்தப் பேச்சின் தாக்கம் சேலம் திமுக-வில் இன்னும் சலசலத்துக் கொண்டிருக்கிறது
இது குறித்து நம்மிடம் பேசிய சேலம் மாநகர் திமுக நிர்வாகிகள் சிலர், “சேலம் மேயர் பதவிக்காக பலரும் மோதிய போது அமைச்சர் ராஜேந்திரன் தான் அஸ்தம்பட்டி பகுதி செயலாளராக இருந்த ராமச்சந்திரனை மேயராக்கினார். இதனால் தனது ஆதரவாளர்கள் மத்தியிலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார் ராஜேந்திரன். துணை மேயர் பதவியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் மாநகர திமுக-வினர் ஒட்டுமொத்தமாக அப்செட் ஆகிப் போனார்கள்.
அமைச்சரால் கொண்டுவரப்பட்டவர் என்பதால், திமுக-வினர் யாருமே மேயர் ராமச்சந்திரனின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தயங்கினர். அப்படி இருக்கையில், அமைச்சரையும் மேடையில் வைத்துக் கொண்டு அவைத் தலைவர் சுபாஷ் மேயருக்கு எதிராகப் பேசி இருப்பது திமுக-வில் விவாதப் பொருளாகியிருக்கிறது. சேலம் மாநகரில் இம்முறை பெரிதாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்பது பெரும் குறைதான். ஆனால், அதற்காக மேயரை மட்டும் குறை சொல்லமுடியாது. அதிமுக ஆட்சியில், முதல்வரின் மாவட்டம் என்ற பார்வையில் சேலத்துக்கு நிறையத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதுபோல் இப்போது இல்லை.
சுபாஷ் சொல்வதைப் போல மேயரை மாற்றுவதால் மட்டுமே இதெல்லாம் சரியாகிவிடாது. இருக்கின்ற கால அவகாசத்தைப் பயன்படுத்தியாவது சேலத்துக்கு புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அப்போது தான் மக்களை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த முடியும். இல்லாவிட்டால் பழையபடியே சேலம் மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக அதிமுக-விடம் கொடுத்துவிட்டு நிற்க வேண்டியது தான்” என்றனர்.
மாநகர திமுக அவைத்தலைவர் சுபாஷிடம் பேசியபோது, “எந்த உள்நோக்கத்தோடும் மேயர் குறித்து நான் அப்படி பேசவில்லை. ஆனால், கட்சியின் வளர்ச்சி முக்கியம். மேயராக இருப்பவர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.
அதேபோல், கவுன்சிலர்களை அழைத்து, வார்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதனை தீர்த்து வைத்தால் தான் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போக முடியும். ஆனால், மக்களோ கவுன்சிலர்களோ மனு கொடுத்தால், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பதிலை மட்டுமே சொல்கிறார் மேயர். சேலத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற மாவட்ட அமைச்சரை அழைத்துச் சென்று மற்ற அமைச்சர்களை சந்திக்க வேண்டும்.
மேயராக அவர் சரியாக செயல்படாமல் இருப்பதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் தான். ஆனால், 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக-வில் இருக்கும் நான், கட்சியின் வளர்ச்சி முக்கியம் என்ற ஆதங்கத்தில் தான், ‘கட்சியின் வளர்ச்சிக்காக என்னை வேண்டுமானாலும் மாற்றுங்கள், மேயரை வேண்டுமானாலும் மாற்றுங்கள்’ என்று பேசினேன்” என்றார்.
இது குறித்து மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டதற்கு, “அது முடிந்துபோன பிரச்சினை, அது பற்றி பேச வேண்டாம்” என்று முடித்துக் கொண்டார்.
முன்பெல்லாம் ஆளும் கட்சியினரின் குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் தான் வீதிக்கு கொண்டுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில், ஆளும் கட்சியினருக்கு ஆங்காங்கே ஆளும் கட்சியினரே சேம் சைடு கோல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.