சென்னை: சேலம் மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அளித்த மனு மீது உரிய பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சுஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சேலம் மேட்டூர் செல்லும் சாலையில் கொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதில் பார் வசதி மற்றும் பார்க்கிங் வசதி எதுவும் இல்லாததால், டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண் அலுவலகம், மருத்துவமனை, பள்ளி கட்டிடங்கள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள்ளாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அமைத்துள்ளதால் பொதுமக்களும், மாணவர்களும் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, சேலம் மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற டாஸ்மாக் நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனுதாரர் அளித்த மனுவினை 8 வாரத்தில் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.