மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்கப்பட்டுவருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது. தற்போது அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 1 லட்சத்து 500 கனஅடியாகவும், இரவு 1,10,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவு நீடித்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 18,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 92,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப நீரை வெளியேற்றியும் வருகின்றனர். மேலும், வெள்ளம் தொடர்பாக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள் ளது. வருவாய், தீயணைப்பு மற்றும் நீர்வளத் துறையினர் கரையோரங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் நிலவரம்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை அளவீட்டின்போதும் விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாகவே நீர்வரத்து தொடர்ந்தது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளை வருவாய், வனம் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.