மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மேட்டூர்அணை நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியை 44-வது தடவையாக எட்டியது. தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 57,732 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 58,000 கனஅடியாக அதிகரித்து. ஆனால், நேற்று மதியம் 48,000 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் முதல் 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கனஅடி, 8 கண் மதகு வழியாக 2,500 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 23,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் செல்வதைக்காண வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். புதுக் காவிரி பாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஒகேனக்கல்லில்… தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று காலை 43 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.