மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மே 26-ம் தேதி தாயைப் பிரிந்த 10 மாதம் உள்ள ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் உடல் மெலிந்து காணப்பட்ட குட்டி யானைக்கு குளுக்கோஸ், லேக்டோஜென், தர்பூசணி, புல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதனிடையே தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ட்ரோன் உதவியுடன் யானை கூட்டத்தை கண்டறிந்து குட்டியை சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. இதற்காக தனிக்குழுக்கள் அமைத்து தாய் யானையை தேடி வந்தனர். அதேபோல குட்டியுடன் உள்ள வேறொரு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.
இதனிடையே கடந்த 18 நாட்களாக குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், எந்த கூட்டமும் குட்டியை சேர்த்து கொள்ளவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சிறுமுகை வனச்சரகம் வனப்பகுதி மற்றும் கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரக வனப்பகுதிகளில் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களில் பெய்த மழைக் காரணமாக, யானைக் கூட்டம் வனப்பகுதிகளில் தென்படவில்லை. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிளிலும் குட்டியை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்க முடியவில்லை.
இதையடுத்து சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளரின் ஆணைப்படி, மீட்கப்பட்ட குட்டி யானையானது, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு பாதுகாப்பாக உரிய வழிமுறையை பின்பற்றி கொண்டு செல்லப்பட்டது.” என்றனர்.