தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று பேசியதாவது: விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பது அரசின் கடமை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை காக்கும். விவசாயிகள் தொடக்க வேளாண் வங்கிகளில் வாங்கிய கடனை 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சியின்போது விவசாயிகள் எப்போது கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை கொண்டு சென்றாலும், உடனடியாக விற்பனை செய்யும் நிலையும், உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் பெறும் நிலையும் இருந்தது. தற்போது விவசாயிகள் நெல்லை, உரிய நேரத்தில் விற்க முடிவதில்லை.
குறுவை பயிர் காப்பீடு: கடந்த 3 ஆண்டுகளாக பயிர்களுக்கு காப்பீடு பெற்றுத் தரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கருகி விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர். குறுவை சாகுபடி காலத்தில் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்க்கப் படாததால்தான் விவசாயிகள் மிகுந்த வேதனையை அனுபவித்தனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பயிர்க் காப்பீட்டில் விவசாயிகளை சேர்த்து இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொடுத்தோம். டெல்டா பகுதிகளில் கோயில் நிலத்தில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கி அங்கு ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக. சிலர் நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை வாங்கி விட்டனர். மீண்டும் அதிமுக அரசு மலரும்.
அப்போது அந்தக் கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு அந்த வீட்டுமனையை அவர்களுக்கே சொந்தமாக்கும் நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் கூறி வருகிறார். அங்கு உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தானே ஆட்சி செய்கிறது.
அவர்களிடம் பேசி மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதிகள் பாலைவனம் ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து பட்டுக் கோட்டை, பேராவூரணியில் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
தீபாவளிக்கு சேலை வழங்கப்படும்: பட்டுக்கோட்டையில் பழனிசாமி பேசும்போது, ‘‘2026-ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளி பண்டி கைக்கு பெண்களுக்கு தரமான சேலை வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 கொடுத்தோம். ஆனால், திமுக அரசு பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லத்தைதான் கொடுத்தது.
இன்று திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு வேறு நடக்கிறது. இதனால், யாரும் தைரியமாக மருத்துவமனைக்குக்கூட போக முடியாத நிலை இருக்கிறது’’ என்றார்.