சென்னை: சென்னையில் நடந்த முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் 6 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி) சார்பில் முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாடு சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது.
‘அறிவுசார் மையம் மூலம் தமிழகத்தை இந்தியாவின் புதுமையின் தலைநகரமாக மாற்றுதல்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் டீப்-டெக் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகேந்திரா, போஷ் உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையம் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் 4 முன்னணி சட்ட நிறுவனங்களிடம் சட்டப்பூர்வ பங்குதாரர்களின் விருப்பக் கடிதங்களும் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்ப மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் உள்வளர்ச்சி பெற்ற 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஐடிஎன்டி மையத்தின் ஃபவுண்டேஷன் நிதியின் கீழ் காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: திராவிட இயக்கம் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும். அந்தவகையில் ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போதும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைவது உறுதிசெய்யப்படும்.
அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐடி துறையில் தமிழகம் பல்வேறு புதிய சாதனைகளை எட்டியிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம், இந்தியாவில் 3-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக மாறியிருக்கிறது. சென்னை மென்பொருள் சேவையின் தலைநகரமாக அழைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் முன்னணி ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் தங்களை விரிவுபடுத்தி வருகின்றன. ஐடி துறையுடன் இணைந்து நான் முதல்வர் திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் அணுகலை வலுப்படுத்த சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் இடங்களில் வைஃபை கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பிரஜேந்திர நவ்னித், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், ஐடிஎன்டி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வனிதா வேணுகோபால், சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி நாட் மலுப்பிள்ளை, மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் அமித் ரஸ்தோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.