சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பாதுகாப்பான, விரைவான, சொகுசான பயணம் என்பதால், இதில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும்போது, பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணிகள் தடையின்றி வந்து செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதல் இணைப்பு வாகனத்தை இயக்கும் விதமாக, தனியாக துணை நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பயணிகளின் வருகை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி முக்கியமானதாக இருக்கிறது. மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டுமே போதாது. எனவே, தனியாக புதிய துணை நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த வுடன், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும். அதாவது, 500 வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.