சென்னை: “மூளை அமீபா பாதிப்பு, தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை.” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான நீர், மாசுபட்ட நீர் நிரம்பிய குளம், குட்டைகள், நீர்நிலைகளில் தேங்கிய சேறுகளில் தான் அமீபா உருவாவதாக சொல்லப்படுகிறது.
அத்தகைய குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியே அமீபா சென்று மூளையை பாதித்து, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கிறது. இது தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை.
அசுத்தமான குளம் குட்டைகளில் குளித்ததால்தான் நேக்லேரியா ஃபோவ்லேரி (Naegeleria Fowleri) என்ற அமீபா ஏற்பட்டு, அரிதான மூளைக் காய்ச்சல் நோயான, முதன்மை அமீபிக் மெனிங்- என்சஃபலிட்டிஸ் (Primary Amoebic Meningo-Encephalitis (PAM) நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மன குழப்பநிலை, கழுத்து வலி, மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கேரள மாநில சுகாதாரத்துறை நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்கி நோய் பாதிப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் குளம் மற்றும் குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் தெருநாய்க்கடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கருத்துகள் மாறுபட்டு உள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அதனை பிடித்த பகுதிகளில் விட்டுவிடுவது மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையாகும். முதல்வர் தெருநாய்க்கடி சம்பவங்கள் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அதில் தெருநாய்கள் பராமரிப்பதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வட்டார அரசு மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த அரசு அமைந்த பிறகு தான் தமிழ்நாட்டு மருத்துவத்துறை வரலாற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்பற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்கடிக்கு ARV மருந்துகள், பாம்புக்கடிக்கு ASV மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.