சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, தமாகா துணைத் தலைவர் விடியல் சேகர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தேமுதிக பொருளாளர் எல். கே.சுதீஷ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, காமராசர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஏழைகளுக்கு சைக்கிள், ஆட்டோ, கணிணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த தலைவரான மூப்பனார், காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர். டெல்லியில் தனி ஆளுமையாக விளங்கினார். நாடு முழுவதும் அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. அவரது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். நாட்டின் பிரதமராக வருவதற்கு மூப்பனாருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அவரை பிரதமராக விடாமல் தடுத்த சக்திகள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தற்போது தமிழ்நாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் புகழ் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள், அப்போது தமிழரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது, தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம். இதை யாரும் மறக்க முடியாது.
தமிழகத்தில் மூப்பனார் கொள்கைக்கு ஏற்ற நல்ல ஆட்சியை உருவாக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டிய நேரம் இது. 2026 தேர்தலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த கூட்டணி மூலமாக இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் நல்ல ஆட்சியைத் தர வேண்டும். போதைப் பொருள் வேண்டாம். சாராயம் எங்கும் பரவுகிறது. ஒரு குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, என்டிஏ கூட்டணி மூலமாக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். சிறு உட்பூசல்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். அனைவரும் ஒற்றுமையாக உழைத்து, நல்லாட்சியை உருவாக்குவதே மூப்பனாருக்கு செலுத்தும் அஞ்சலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உயர்ந்த உள்ளம் கொண்டவர்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, தேசிய அளவில் தனி முத்திரை பதித்தவர். எளிமையான அவர், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். கட்சி பேதமின்றி, யார் அழைத்தாலும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களை மகிழ்விக்கக் கூடிய பண்பாளர். தமாகாவைத் தொடங்கி திறம்பட நடத்தினார். மூப்பனார் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யும் இடத்தில் இறுதிச் சடங்கு முடியும் வரை காத்திருந்து, புகழஞ்சலி செலுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மூப்பனார் உயர்ந்த பண்பும், உள்ளமும், நல்ல எண்ணமும் கொண்டவர். தேசத்துக்காவும், மக்களுக்காகவும் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர்” என்றார்.
ஆட்சி மாற்றத்தின் அடித்தளம்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, “மூப்பனார் நினைவு நாளில் என்டிஏ தலைவர்கள் கலந்துகொண்டு, கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இது 2026 ஆட்சி மாற்றத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது. ஒன்றுபட்டு செயல்பட்டு, வென்று காட்டுவோம்” என்றார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “அனைவரும் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த நாளில் சங்கல்பம் எடுத்துக் கொள்வோம்” என்றார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர்: அண்ணாமலை பேசும்போது, “மூப்பனார் வழியில், நேர்மையான அரசியலை தமிழகத்தில், இந்தியாவில் கொடுக்க வேண்டும். 2026 சட்டப்பேரவையில் மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் பழனிசாமி, முதல்வர் நாற்காலியில் அமர்வார். மாற்றமும், புரட்சியும் ஏற்பட்டு, ஏழைகளுக்கு விடிவெள்ளி அரசு உருவாகட்டும்” என்றார்.
தேமுதிக வரவேண்டும்… ஆனால், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார். முதலீடுகளை ஈர்ப்பது பிரதமர் மோடிதான். உலக அளவில் பாரதத்தின் பெருமையை அவர் உயர்த்தியதால்தான் தமிழகத்துக்கு முதலீடு கிடைக்கிறது. இந்த கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுக அரசை தோற்கடிக்க வேண்டும். மூப்பனார் பிரதமராவதை பலர் தடுத்தனர். அப்துல் கலாம் குடியரசுத் தலைவராவதை தடுத்தார்கள். தற்போது சிபி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வருவதை திமுக விரும்பவில்லை. தமிழருக்கு திமுக ஆதரவு அளிக்காததில் இருந்தே, இவர்களது பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த்துக்கும், மூப்பனாருக்கும் 40 ஆண்டுகால நட்பு உண்டு. நாங்கள் ஜி.கே.மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். இந்த நிகழ்வில் பங்கேற்றதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. நட்பு ரீதியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 2026-ல் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி அமோக வெற்றி பெறும். வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் கட்சி கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்றார்.
இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி: மூப்பனார் நினைவு நாள் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அப்போது, பின்னால் நின்றிருந்த அண்ணாமலையை அருகில் வந்து நிற்குமாறு பழனிசாமி அழைத்தார்.
பின்னர், நினைவிடத்தை சுற்றி வருவதற்கு பழனிசாமியை அண்ணாமலை அழைத்துச் சென்றார். தொடர்ந்து, இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். பின்னர், பழனிசாமி புறப்பட்டுச் செல்லும்போது, அண்ணாமாலைக்கு கைகொடுத்து விட்டுச் சென்றார்.
பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அதிமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், பழனிசாமி – அண்ணாமலை இடையே மோதல் போக்கு நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், பழனிசாமி – அண்ணமலை இருவரும் ஒன்றாக இருந்தது. அதிமுக – பாஜக இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்று இருகட்சித் தொண்டர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.