சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மகன்கள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன், மகள் பூங்கொடி உள்ளனர்.
நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவருக்கு, பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறை மரியாதை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, காவல் துறை மரியாதையுடன் வா.மு.சேதுராமன் இறுதிச்சடங்கு நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. முன்னதாக, பொது மக்களின் அஞ்சலிக்காக விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட்டம்
அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,‘பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்திஅறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட முரசொலியில், ‘ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமைநாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய் திரண்டெழுந்தே வலிமைகாட்டுவோம்’ என கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை சிந்தைஏற்க மறுக்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளையும் சுற்றி தமிழ்த் தொண்டாற்றியவர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வா.மு.சேதுராமனின் பன்னாட்டு தமிழுறவு மன்றம் உலகம் தழுவிய அளவில் 7 மாநாடுகளை அயல்நாடுகளில் நடத்தி, உலகத் தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தியது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சிக்காக ஓய்வறியா உழைப்பை வழங்கியவர்.
பாமக தலைவர் அன்புமணி: அன்னைத் தமிழுக்கு பணி செய்வதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த வா.மு.சேதுராமன், பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்ட தமிழ் பாதுகாப்பு பணிகளுக்கு துணையாக இருந்தவர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழ் மொழியின் மேன்மை காக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ் இலக்கியங்களை உள்வாங்கி, வெளிப்படுத்தும் இவரது கவித்துவப் படைப்புகள் என்றென்றும் அவரது ஆய்வறிவை போற்றி நிற்கும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தமிழ் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப பாடுபட்ட செந்தமிழ் கவிமணி வா.மு.சேதுராமனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.