சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞரும் கவிஞருமான கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.
“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல்.
தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் – தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை: மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக தமது 91-வது வயதில் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். தமது வாழ்வின் தொடக்கத்திலிருந்து தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்டு சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
நிறைய தமிழ் நூல்களை எழுதியதோடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்து உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தவர். தமிழ்ப் பணி மூலம் தமிழுக்கு தொண்டாற்றிய இவர் பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி, திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்காக ஓய்வறியா உழைப்பை வழங்கிய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் வா.மு.சே. திருவள்ளுவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: மூத்த தமிழறிஞரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முதுமை காரணமாக சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அன்னைத் தமிழுக்கு பணி செய்வதையே வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த அவர், ராமதாஸ் மேற்கொண்ட தமிழ் பாதுகாப்பு பணிகளுக்கு துணையாக இருந்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். ஏராளமான நூல்களை எழுதிய அவர், பல விருதுகளையும் வென்றுள்ளார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ: பன்னாட்டு தமிழ் உறவு மன்ற நிறுவனரும், மூத்த தமிழறிஞருமான வா.மு.சேதுராமன் முதுமை காரணமாக நேற்று இரவு 7 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்ற துயரச் செய்தி மின்னலாய் தாக்கி என்னை நிலைகுலையச் செய்தது.
32 ஆண்டுகளாய் தமிழ் மொழியின் மேன்மை காக்க தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை உருவாக்கியவர் வா.மு.சேதுராமன். கடந்த 50 ஆண்டுகளாக ‘தமிழ் பணி’ என்ற திங்கள் இதழை தொடர்ந்து ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வரும் வா.மு.சேதுராமன், 30 உலக கவிஞர் மாநாட்டினை பல நாடுகளில் நடத்தி, தமிழ் கவிஞர்களைப் பாராட்டியவர். அவரின் பன்னாட்டு தமிழ் உறவு மன்றம் உலகம் தழுவிய அளவில் ஏழு மாநாடுகளை அயல்நாடுகளில் நடத்தி, உலகத் தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தியது.
நெஞ்சத் தோட்டம், தமிழ் முழக்கம், சேதுகாப்பியம், கலைஞர் காவியம் முதலான நூற்றுக்கணக்கான நூல்களையும், இலட்சக்கணக்கான கவிதைகளையும் தமிழ் இலக்கியத்திற்கு அருட்கொடையாக வழங்கியவர் வா.மு.சேதுராமன் ஆவார். அவரது தமிழ் பணிக்கு என் வீர வணக்கத்தையும், அவரைப் பிரிந்து வாழ்பவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் என தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்ற அமைப்பை நிறுவி உலகத் தமிழர்களின் உறவுப் பாலமாக திகழ்ந்தவர். தமிழ் மொழி வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வை அர்பணித்தவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்