மேட்டூர் / தருமபுரி: நீர்வரத்து விநாடிக்கு 80,984 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 73,452 கனஅடியாகவும், மாலையில் 80,984 கனஅடியாகவும் உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 22,500 கனஅடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் நேற்று 117.93 அடியாகவும், நீர் இருப்பு 90.20 டிஎம்சியாகவும் இருந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 2.07 அடி தான் தேவை. இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மேட்டூர் அணை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டும் என்பதால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 50,000 முதல் 75,000 கனஅடி வரை உபரி நீர் திறந்து விடப்படலாம். எனவே, காவிரிக் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 78 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 3 மணியளவில் 70 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.