குமுளி: பருவநிலை மாற்றத்தின்போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய கண்காணிப்புக் குழுவும், ஜூன் 3-ம் தேதி துணைக் கண்காணிப்புக் குழுவும் ஆய்வு செய்தன. இந்நிலையில், செப்.11-ம் தேதி துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்த உள்ளது.
இதன் தலைவராக, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லை பெரியாறு அணை கண்காணிப்புப் பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாகப் பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.
கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட உள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் தலைமை குழுவும், துணைக் குழுவும் பெயரளவுக்கு ஆய்வு செய்கின்றன. நீர்மட்டத்தை உயர்த்துவதில் பின்னடைவே உள்ளது. தமிழக அரசு அழுத்தம் கொடுத்து துரிதப்படுத்த வேண்டும்’ என்றனர்.