ஈரோடு: செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்காக இபிஎஸ்-க்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்னூரில் நடந்த அந்தப் பாராட்டு விழாவில், மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார் செங்கோட்டையன்.
அதன் பின்னர் பல்வேறு தருணங்களிலும் அவர் இபிஎஸ் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பேரணியை இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். அவர் இதற்காக கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். ஆனால், கோபி எல்லையில் இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வரவேற்பு அளிக்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரை ஒரு மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் இவ்வாறாக புறக்கணித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோயிலில் ஒரு திருமண நிகழ்வில் செங்கோட்டையன் நேற்று பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசித்ததாக தகவல். தொடர்ந்து இன்றும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து, மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமா? என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளது என்று மட்டும் தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்கிறதா? என்ற கேள்விக்கு சிரித்து முகத்துடன் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார். அவரின் அறிவிப்பும், சூசக சிரிப்பும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.