மதுரை: முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஏற்று, அதில் நாங்கள் கலந்து கொண்டோம். இதில் அரசியல் இல்லை. நீதிமன்றம் உறுதியாகன தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால், பெரியார், அண்ணா குறித்து அவதூறு வீடியோ ஒளிபரப்பப்பட்டது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெறுகின்றன. நாங்கள் ஒருபோதும் எங்களது கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
அண்ணா, ஜெயலலிதா குறித்து அவதூறு பேசியதால், பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுகவைப்போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, ஆட்சி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பழனிசாமி கிடையாது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் எங்களுக்கு மேடை நாகரிகம் கற்றுக் கொடுத்துள்ளனர். மேடை நாகரிகம் கருதியே நாங்கள் அமைதியாக இருந்தோம். அண்ணாவுக்கு இழுக்கு என்றால், அதற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுகதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.