மதுரை: “முருக பக்தர்கள் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பில்லை,” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: “மக்களுக்கு சேவை செய்தவதை விட, மக்களுக்கு பணி செய்வதை விட அதிமுக மீது அவதூறுகளை கூறிவதில்தான் திமுக அதிக நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் ராணுவ கட்டுப்பாட்டுடன், இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டு வகையில் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். ஆளும் திமுக அரசு, ஆட்சி நம் கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சத்தில் எல்லையை மீறி இன்றைக்கு அவதூறுகளை அதிமுக மீது பரப்பி வருகிறது.
எந்தப் பிரச்சினை என்றாலும் அதை மடைமாற்றம் செய்வதும், திசை திருப்பி விடுவதையும் திமுக செய்து வருகிறது. பேரறிஞர் அண்ணா சொன்னது போல மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்ற கூற்றின்படி முருக பக்தர்கள் அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கலந்து கொண்டோம். அதில், அரசியல் இல்லை. நீதிமன்றம் அதில் உறுதியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், அரசியல் இருக்காது என்று நம்பிக்கையோடுதான் நாங்கள் கலந்து கொண்டோம். அங்கு தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா குறித்து அவதூறு வீடியோ பரப்பப்பட்டதாக செய்தி விவாதம் தற்போது வெளிவந்துள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டின் தீர்மானங்களுக்கும்,அதிமுகவுக்கும் தொடர்பில்லை. ஒரு நாளும் கொள்கைகளை, கோட்பாடுகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதிமுகவைப் பொறுத்தவரை அண்ணா, ஜெயலலிதா பற்றி அவதூறு பேசியதால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவை போன்று எல்லாவற்றுக்கும் சரி செய்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கின்ற தலைவர் எங்கள் தலைவர் அல்ல.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எங்களுக்கு மேடை நாகரிகம் கற்றுக் கொடுத்துள்ளனர். மேடை நாகரிகம் கருதி நாங்கள் இருந்தோம். அண்ணா பற்றி இழுக்கு என்றால் அதற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான். கொட்டு மழையில் ராபின்சன் பூங்காவில் அண்ணா தோற்றுவித்த இயக்கத்தை, இன்றைக்கு திமுக குடும்ப சொத்தாகிவிட்டது,” என்று அவர் கூறினார்.