மதுரை: மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று இந்து முண்ணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை பாண்டி கோவில் அருகேயுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடத்தப்படும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.
அந்த வேல்களுக்கு வண்டியூரில் உள்ள மாநாட்டு அலுவலகத்தில் நேற்று காலை பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியனஅ செய்தியாள்களிடம் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் கண்காட்சி வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.
இதற்காக அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு அமைப்பினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
சென்னிமலையை கிறிஸ்தவர்கள் தங்களுக்குரியது எனக் கூறியபோது எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசி வருகின்றனர். இதைக் கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாக முருக பக்தர்கள் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் உள்ளிட்டோ் பங்கேற்கின்றனர். மேலும், மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர்கள் மோகன், ரஞ்சித் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயம் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். மதுரை போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மாநாட்டைத் தடுக்கும் பணியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.