சென்னை: குறுகிய அரசியல் பார்வையுடன் மும்மொழிக் கொள்கையை பிரச்னையாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற ‘தக் ஷின பதா’ மாநாட்டில் கலந்துகொண்ட தர்மேந்திர பிரதான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வி நிதி விவகாரம் குறித்து 2 ஆண்டுகளாக பேசிவருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாகவே பார்க்கிறது.
இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை நாடே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மதிய உணவு உட்பட பல்வேறு நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது. நடப்பாண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆர்டிஇ திட்டத்துக்கான நிதி பங்கீட்டில் நீதிமன்றம் சில உத்தரவுகளை கொடுத்துள்ளது. அதை பின்பற்றி செயல்படுவோம். சமக்ர சிக் ஷா நிதி விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி என்னை சந்தித்தனர். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்று அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். அப்போதுதான் சமக்ர சிக் ஷா நிதியை மத்திய அரசு வழங்கும். இது மாணவர்களின் நலனுக்கான விஷயம். இதில் அரசியல் கூடாது. இருதரப்பும் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மாநில அரசு மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம். 3-வது மொழியாக ஏதேனும் ஒருமொழியை படிக்கச் சொல்கிறோம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. மாறாக 3-வது மொழியை கற்றலைதான் ஊக்குவிக்கிறோம். நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மீதமுள்ளவர்கள் தாய் மொழியை பேசுகின்றனர்.
குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்கள்தான் இதை பிரச்சினையாக்குகின்றனர். அரசியல் காரணங்களுக்காக மொழிப் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது தவறானது. நான் ஒடியா மொழியை சேர்ந்தவன். என் மொழியை நேசிக்கிறேன். ஆனால், மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியால் பிரிவினை ஏற்படுத்தியவர்கள் தோற்றுள்ளனர். தற்போது சமூகம் அரசியலைவிட முன்னேறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
100 சதவீதம் தேர்ச்சி பெறும்: சென்னை ஐஐடி நிகழ்வில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை அனைவரும் எழுத்தறிவு பெற புதிய திட்டங்களை கொண்டுள்ளது. கற்றல், கற்பித்தலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரைகளையும் வழங்குகிறது. அதன்படி அடுத்த 20 ஆண்டுகளில் 100 சதவீத கல்வியறிவை பெற்ற நாடாக இந்தியா மாறும் என்றார். மேலும், தென்னிந்திய மக்கள் தங்கள் நாகரீகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். நம்நாடு பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது என்றும் பேசினார்.
காங்கிரஸ் கண்டனம்: இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது கண்டிக்கத்தக்கது”என்று தெரிவித்துள்ளார்.