குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார்.
அனைத்து முன்னாள் ராணுவவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.