ஶ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் எம்.பி.யான எனக்கு அதிமுகவில் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை. அதனால் கட்சி பிரச்சினை குறித்து கருத்து சொல்ல இயலாது, என நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவில் நடிகர் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலக திறப்பு விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்து நடிகர் ராமராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி:
நற்பணி மன்றத்தில் பணம் கட்டி உறுப்பினராக சேர வேண்டும் எனக் கூறுவது ஶ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான். தற்போது ரூ.60 ஆயிரம் கட்டி 32 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர்.
ரசிகர் மன்ற உறுப்பினராக இருப்பவருக்கு பெண் கொடுக்க தயாராக உள்ளனர். கண் பார்வையற்ற ரசிகர் மன்ற தலைவர் தாமரைக்கனி மன்றத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
1967 முதல் எம்ஜிஆர் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டே அரசியல் களம் இருக்கிறது. இன்றைய அரசியல் களத்தில் ஏதோ நடக்கிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. வேட்புமனு வாபஸ் பெரும் கடைசி நாளில் கூட அரசியல் மாறலாம். எனது உயிர் உள்ளவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நடப்பேன்.
அதிமுக எம்.பியாக இருந்துள்ளேன். இப்போது எனக்கு அதிமுகவில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. அதனால் கட்சி விவகாரம் குறித்து என்னால் கருத்து சொல்ல இயலாது. குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். அதுபோல் தான் அதிமுக உட்கட்சி பிரச்சினையும். ஆனால் இறுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான் அனைவரும் செல்வார்கள். நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.