சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள், ஐஆர்எஸ் அதிகாரி, ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியை தொடங்கி, திமுகவையும் பாஜகவையும் கடும் விமர்சனம் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். பூத் கமிட்டி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தும் பணிகளை தவெக தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளை நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி கொண்டாட கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தனது பிறந்தநாளின்போது, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார். அப்போது, 42 நாட்கள் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாற்று கட்சியில் இருந்து விலகியவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வுபெற்ற அருண்ராஜ் நேற்று தவெகவில் இணைந்தார். அதேபோல், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனருமான ஸ்ரீதரன், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன், ஓய்வுபெற்ற நீதிபதி சி.சுபாஷ் ஆகியோரும் கட்சியில் தங்களை நேற்று இணைத்துக் கொண்டனர்.
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வந்த அவர்களை விஜய் வரவேற்று சால்வை அணிவித்தார். தவெகவில் இணைந்த வருமானவரித் துறை அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தவெகவின் கொள்கைபரப்பு மற்றும் செயல் திட்டங்களை மேம்படுத்ம் வகையில் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி. அருண்ராஜ் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர் எனது உத்தரவு மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதல்படி கொள்கை சார்ந்த செயல் திட்ட பணிகளை மேற்கொள்வார். கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தவெகவில் காலியாகவுள்ள 6 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களையும் ஒன்றிய, வட்ட, பகுதியில் காலியாக உள்ள பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார்.