சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார்.
3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலையும் முதல்வருக்கு கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவின் பரிந்துரைப்படி, முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சை ஜூலை 24-ம் தேதி (நேற்று) காலை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில், வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதியானது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘மருத்துவமனையில் இருந்து முதல்வர் வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்’’ என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.