சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
பழனிசாமி: உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 2021 முதல் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக கூறுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் போடப்பட்டதன் தொடர்ச்சியே.
நான் முதல்வராக இருந்தபோது, கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41. இதன்மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமல்ல, அங்குள்ள கால்நடைப் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதுபோன்ற கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,100 கோடியில் உருவாக்கினேன். அதை அழிக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், கடந்த சுற்றுப் பயணங்களின்போது வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்ததுபோல இல்லாமல், இந்த முறை தமிழகத்துக்கு தேவையான முதலீட்டை ஈர்க்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பிய பயணத்துக்கு வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட முதல்வர், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் இருப்பது மக்களை குழப்பமடையச் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் ரூ.7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், டாவோஸ் பயணத்தில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளைக் குவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. கடந்த 2022-ல் துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தாயின என தமிழக அரசு கூறியது. 3 ஆண்டுகள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, முதலீடுகள் வரும். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.