சென்னை: முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்தில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புதிய முதலீ்ட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் பயணத்தின் பகுதியாக, ‘டிஎன் ரைசிங்’ ஐரோப்பிய பயணத்தின் 2-ம் கட்டத்தில், நேற்று உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர்மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது, எம்ஆர்ஓ வசதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மையம் மற்றும் ஓசூரில் அதன் ஐஏஎம்பிஎல் கூட்டு முயற்சியின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகியவற்றுடன், தமிழகத்தில் அந்நிறுவன செயல்பாடுகளின் விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது.
லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலி ஜென்ஸ் நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 2026-ம் நிதியாண்டில் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வில்சன் பவர் & டிஸ்ட்ரிபியூஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழகத்தில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவ ரூ.300 கோடி முதலீடு மற்றும் 543 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டானியா கார்மென்ட் பேக்கேஜிங்கின் துணை நிறுவனமான பிரிட்டானியா ஆர்எப்ஐடி டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம், திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட ஆர்எப்ஐடி டேக் உற்பத்தி பிரிவை அமைக்க ரூ.520 கோடி முதலீடு மற்றும் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கல்வித் துறையில், கோயம்புத்தூரில் வடிவமைப்பு சார்ந்த உயர்கல்வி நிறுவனத்தைத் தொடங்க ஈகோலி இன்டுய்ட் லேப் நிறுவனம், சக்தி எக்சலன்ஸ் அகாடமியுடன் கூட்டாண்மையில் இணைந்து, தமிழகத்தில் அடுத்த தலைமுறை படைப்பாற்றல் நிபுணர்களை உருவாக்கும். மேலும் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக எக்ஸிடெர் பல்கலைக்கழகம் தமிழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தமிழகம் பயன்படுத்திக் கொண்டது. எப்டிஏ கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகளை ஆராய்ந்திடவும் நேற்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதன்மை செயலர் பு.உமாநாத், துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது உடன் இருந்தனர்.