சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். 3 நாட்களுக்குப் பிறகு முதல்வர் வழக்கமான பணிகளை தொடரலாம் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’அப்போலோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வரை வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
வீடு திரும்பிய தமிழக முதல்வரை, நீர்வளத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார்.
சில தினங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, முதல்வருக்கு கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
‘முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவின் பரிந்துரைப்படி, முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சை ஜூலை 24-ம் தேதி காலை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில், வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதியானது’ என்று மருத்துவமனை தெரிவித்தது. மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு மற்றும் கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.