சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி புறப்பட்டு சென்றார். முதலில் ஜெர்மனியிலும், பின்னர் இங்கிலாந்திலும் முதல்வர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். தமிழக தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் சென்றனர்.
இந்த பயணத்தின்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜி.யு.போப் கல்லறை, கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்டார். முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான்
பென்னிகுயிக் சிலையை, இங்கிலாந்தில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக அவரது குடும்பத்தினரும், செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், 8 நாள் ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று பிற்பகல் லண்டனில் இருந்து புறப்பட்டார். துபாய் வழியாக விமானத்தில் நாடு திரும்பும் அவர் இன்று காலை 8 மணி அளவில் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.