சென்னை: ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். ஜெர்மனியில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் ‘டி என் ரைசிங் யுரோப்’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘டி என் ரைசிங் ஜெர்மனி’ முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஜெர்மனியில் மொத்தம் 26 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.7,020 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டுக்கு முன்வந்துள்ளன.
இந்த மாநாட்டில் வென்சிஸ் எனர்ஜி (ரூ.1,068 கோடி), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி), ஹெர் ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி), பல்ஸ் (ரூ.200 கோடி), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி) மற்றும் மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி ) ஆகிய முக்கிய நிறுவனங்கள் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
பிஎம்டபிள்யு நிறுவனத்தின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, ஆட்டோ மொடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கை எடுத்துரைத்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழகத்தில் அதிகப்படுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழகம் கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ் பில்டங்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கும் இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் 20,000 மாணவர்களாக உயரும்.
தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பல முதலீட்டாளர்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்களை சந்தித்தார். இந்நிகழ்வுகளில், அமைச்சர் டிஆர்பி.ராஜா, தொழில் துறைச் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய வளர்ச்சிப் பாதை: ஜெர்மனியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகமான இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தித் துறை வளர்ச்சியையும் அடைந்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். 48 சதவீதம் நகர்மயமான, அதிக தொழிற்சாலைகளும், பணியாளர்களும் இருக்கக்கூடிய மாநிலமும் தமிழகம்தான்.
ஜெர்மனியைப்போல தமிழகத்துக்கும் பெரிய வரலாறு, பாரம்பரியம் உள்ளது. தமிழும், ஜெர்மனும் உலகின் பழமையான மொழிகளில் முக்கியமானவை. இப்படிப்பட்ட மாநிலத்தில் தொழில் தொடங் உங்களை எல்லாம் அழைக்கிறேன்.
ஜெர்மனியின் பண்பாடு, தொழில் நுணுக்கம், புத்தாக்க வலிமை போன்றவை வியப்பை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் தற்போது பல ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றன. ‘மேட் இன் ஜெர்மனி’யை எப்படி தரத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் பார்க்கிறார்களோ, அப்படி ‘மேட் இன் தமிழ்நாடு’ என்பதும் தரமும், திறனும் கொண்ட பெயராக உருவாகிக் கொண்டிருக்கிறது. சைக்கிள் முதல் டாங்குகள் வரை நாங்கள் தயாரித்து வருகிறோம்.
ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கிய தொழில்துறை நாடோ, அதேபோல இந்தியாவில் தொழில்துறையின் இதயத் துடிப்பாக தமிழகம் திகழ்கிறது.
முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், 54 லட்சம் குறு, சிறு நிறுவனங்கள், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இருக்கும் தமிழகத்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே உள்ள பொருளாதார உறவு மூலமாக, தற்போதுள்ள நட்பை இன்னும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.
ஜெர்மனி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் திட்டங்களை நிறுவியதே, தமிழகத்தில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதற்கு சான்றாகும்.
உலகளவில் நீங்கள் சிறந்து விளங்கும் ரோபோடிக்ஸ், மூலதனப் பொருட்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். திறன் மேம்பாட்டில் ஜெர்மனியைப்போல, தமிழகமும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. உங்களது பயிற்சி நுணுக்கங்களும், நுட்பங்களும் எங்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன.
தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழகத்தின் ஆற்றலையும் இணைத்தால், உலக அளவில் புதிய வளர்ச்சிப் பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே வலுவான வர்த்தகப் பாலத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு காத்திருக்கிறது. எனவே, உங்களுடைய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா: ஜெர்மனி பயணத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா அமைச்சரும், அதிபருமான ஹென்ட்ரிக் வுஸ்ட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தின் திறமையான மற்றும் படித்த இளைஞர்கள், ஜெர்மனியின் மனிதவளத்தில் பங்களிக்க வழிவகை செய்வது குறித்தும் முதல்வர் விவாதித்தார். மேலும், ஹென்ட்ரிக் வுஸ்ட், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குழுவை தமிழகம் வரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.