சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சமாளித்துக் கொண்ட முதல்வர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றார்.
இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.
முதல்வர் உடல்நிலை குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கூறுகையில், “முதல்வர் நன்றாக உள்ளார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக பயணங்கள், ரோட் ஷோ மேற்கொண்டதால் அவருக்கு தலைசுற்றல் இருந்து வந்தது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்கள் முதல்வரை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார் கள். 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 22-ம் தேதி (இன்று) ஒரு சில மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சைக்கு பிறகு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்” என்றார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், முக்கிய அரசியல் தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்கள் ஓய்வெடுக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. முதல்வர் மருத்துவமனையில் இருந்தே தனது அலுவலக பணிகளை கவனித்துக் கொள்வார்’ என கூறப்பட்டுள்ளது.