சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ‘காவலர் நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் டிஜிபி, காவல் ஆணையர் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர்.
இந்தாண்டு ஏப்ரல் 29-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் பேசும்போது, “முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப். 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி, முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, பணியின்போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காவலர் நாள் விழா 2025-ல், காவலர் நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. முதல்வர் உறுதி மொழியை வாசிக்க, மைதானத்தில் கூடியிருந்த போலீஸார் அதை திரும்ப கூறினர். மேலும், காவலர் நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற காவலர் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டம்-ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண், கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன், ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். ‘உலகில் பல சிறப்பு தினங்கள் கொண்டாடப்பட்டாலும் போலீஸாருக்கென்று ஒரு தினம் இல்லாமல் இருந்தது.
அந்த குறையை முதல்வர் போக்கியுள்ளார். ஓய்வின்றி உழைக்கும் காவலர்களுக்கென்றும், அவர்கள் கொண்டாடுவதற்கும், அவர்களை கொண்டாடுவதற்கும் ஒரு நாள் வேண்டும் என்று அறிவித்த முதல்வருக்கு நன்றி. காவலர்கள் சிறப்பாக பணி செய்ய இது மேலும் ஊக்குவிக்கும்’ என்று டிஜிபி வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தெரிவித்தனர்.