தருமபுரி: ‘விஷச் சாராய உயிரிழப்புகளின் போது கள்ளக்குறிச்சிக்கு ஆறுதல் கூற செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது கரூருக்குச் சென்றுள்ளார்’, என பாலக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏனெனில், மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுக-வும் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வருவது அதிமுக தான். மக்களுக்காக செயல்படும் கட்சி அதிமுக. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறினார். அதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளின்போது அவர் ஏன் செல்லவில்லை. தற்போது அவர் சென்றிருப்பது தேர்தல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டுதான். பழனிசாமிக்கு கொள்கை இல்லை என கூற ஸ்டாலினுக்கு தகுதி உள்ளதா? முரண்பட்ட கொள்கைகளுடன் கூடிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திய இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் நோக்கமும், கொள்கையும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது மட்டும்தான்.
திமுக கூட்டு சேர்ந்து மத்திய அமைச்சரவை யில் இடம்பெற்றபோது பாஜக நல்ல கட்சி. அதிமுக கூட்டணி சேரும்போது பாஜக மதவாதக் கட்சியா? தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தருமபுரி மாவட்டத்துக்கான நீர்ப்பாசன திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றித் தரவில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்ற 53 மாதங்கள் போதாதா? எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கான இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது:
எங்கள் கூட்டணி கொள்கை: ஆட்சி நிர்வாகத்தில், நிதி நிர்வாகத்தில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில், போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எங்கள் கூட்டணி கொள்கைக்கான அடிப்படை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.