சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89%, அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதல்வர் சென்றிருக்கத் தேவையில்லை. எனவே, முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வியடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக வரக்கூடிய சிறிதளவு முதலீடுகளையும், வருவதற்கு வழியில்லாத பெருமளவு முதலீடுகளையும் தாம் ஈர்த்து வந்ததாக முதலமைச்சர் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.
ஜெர்மனியில் மட்டும் ரூ.7020 கோடி முதலீடு திரட்டப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவற்றில் ரூ.3201 கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 3 நிறுவனங்களும் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையைச் சுற்றி இயங்கி வருபவை தான் என்பதை அப்போதே ஆதாரங்களுடன் தெரிவித்து அம்பலப்படுத்தியிருந்தேன்.
அதற்கு அடுத்த நாள் ரூ.3819 கோடி மதிப்புக்கு 23 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இவற்றிலும் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்படுபவை தான்.
எடுத்துக்காட்டாக வென்சிஸ் எனர்ஜி ரூ.1068 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சென்னையில் உள்ள குழுமத்துடன் இணைந்து கும்மிடிப்பூண்டி பகுதியில் காற்றாலை கருவிகளை உற்பத்தி செய்ய ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான முதலீடு தான் இப்போது கணக்குக் காட்டப்படுகிறது.
அதேபோல், பிஏஎஸ்எஃப் ரூ.300 கோடி முதலீடு, பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் ரூ.300 கோடி முதலீடு , ஹெர்ரென்க்னெக்ட் இந்தியா ரூ.250 கோடி முதலீடு, விட்சென்மேன் இந்தியா ரூ.200 கோடி முதலீடு ஆகியவையும் விரிவாக்கத்திட்டங்களுக்கானவை தான். ஜெர்மனியில் திரட்டப்பட்ட ரூ.7020 கோடி முதலீடுகளில் குறைந்தது ரூ.5319 கோடி முதலீடு விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான்.
இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். இந்துஜா குழுமம் ரூ.7500 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுமம் தான் சென்னையில் அசோக் லேலண்ட் வாகன ஆலையை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் பேட்டரி சேமிப்பு அமைப்பு உள்ளிட்ட மின்சார வாகனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த முதலீட்டை செய்யப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே இந்த நிறுவனம் வெளியிட்டு விட்டது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்த இந்த நிறுவனம் அந்த முதலீட்டையே இன்றுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89%, அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும்.
இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை. இதுதொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் விமர்சனங்கள் முதலமைச்சரை சுட்டதாலோ என்னவோ, விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியது கட்டாயம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவ்வாறு செல்ல வேண்டியத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களை இன்னொரு மாநிலத்தில் செயல்படுத்த நினைத்தால், அதற்கான முதலீடு 20% வரை அதிகரிக்கும். அதனால், அனைத்து நிறுவனங்களும் ஏற்கனவே செயல்பட்டு வரும் மாநிலத்தில் தான் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற நினைக்கும்.
அதையும் தாண்டி ஒரு நிறுவனம் வெளி மாநிலங்களில் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்றால், ஏற்கனவே அந்த நிறுவனம் செயல்பட்டு வரும் மாநிலத்தில் சட்டம் & ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதாகவும், ஆட்சியாளர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை என்றும் தான் பொருள்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சரே வெளிநாடு செல்ல வேண்டிய தேவை உள்ளது என்றால், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அதன் விரிவாக்கத் திட்டங்களை வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் அளவுக்கு தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை நிலவுகிறதா? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் விளக்கமளிக்க வேண்டும்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்காகத் தான் இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்தி வருகிறது. இந்த நாடகங்களை நம்பி தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். உரிய நேரத்தில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.