திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.
முன்னதாக, கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ’உள்ளம் தேடி’ ’இல்லம் நாடி’, ’கேப்டனின் ரதயாத்திரை’ ’மக்களை தேடி மக்கள் தலைவர்’ ஆகிய பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயணத்தில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார்.
ஆரம்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, மாதர்பாக்கம், பாலவாக்கம், சீத்தஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அப்போது, அவர் தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் தங்கள் கட்சி கொடியை ஏந்தி வரவேற்றனர்.
பிரச்சாரத்தின்போது பிரேமலதா பேசியதாவது: இந்த சுற்றுப்பயணம் ஆடிப் பெருக்கு நாளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி தேமுதிக தொடர்ந்து வெற்றியை பெறும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி, வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். தேமுதிகவின் கொள்கை, லட்சியங்களை நிறைவேற்றும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும்.
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீருக்கான ஏரிகள் தூர்வாரப்படாமல், போதிய நீர் இல்லாமல் உள்ளன. பாலியல் வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள், சங்கிலி பறிப்பு, கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடுகிறது.
இப்பிரச்சினைகளை தேமுதிக கூட்டணி தீர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த சுற்றுப்பயணத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் உள்ளிட்டோரும் பங்கு பெற்றனர். இன்று ஆவடி, திருத்தணி தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.